SharePoint
iWorkHealth > iOwnWSH பங்கேற்பாளர்களுக்கான விதிமுறைகளும், நிபந்தனைகளும்

iOwnWSH பங்கேற்பாளர்களுக்கான விதிமுறைகளும், நிபந்தனைகளும்

பங்கேற்பாளர் பின்வரும் விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் (“விதிமுறைகள்") கட்டுப்பட்டு நடக்க ஒப்புக்கொள்கிறார்:

1. விளக்கங்கள்

1.1 இந்த விதிமுறைகளில், குறிப்பிட்ட சூழலுக்கு ஏற்ப  வேறுவிதமாகத் தேவைப்பட்டால் அன்றி, பின்வரும் விளக்கங்கள் பொருந்தும்:

(a) “மதிநுட்பச் சொத்து" என்பது காப்புரிமைகள், பதிப்புரிமைகள், தொழில் முத்திரைகள், சேவை முத்திரைகள், தொழில் பெயர்கள், களப் பெயர்கள், சின்னங்கள், புறத் தோற்றங்கள், புத்தாக்கங்கள், பதிவுசெய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத வடிவமைப்பு உரிமைகள், இதர மதிநுட்பச் சொத்து உரிமைகள் ஆகியவற்றை உள்ளடக்கும்.

(b) “iOwnWSH" என்பது வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார உரிமத்துவம் ஆகியவை பற்றி இணையம்வழி மதிப்பீடு செய்யும் கருவியைக் குறிக்கும்.

(c) “iWorkHealth" என்பது சமூக உளவியல்சார்  சுகாதாரம் பற்றி இணையம்வழி மதிப்பீடு செய்யும் கருவியைக் குறிக்கும்.

(i) “பங்கேற்பாளர்" என்பவர், iOwnWSH கருவியைப் பயன்படுத்தப் பதிந்துகொண்டு, iWorkHealth-ல் கணக்கு வைத்திருக்கும் எந்தவொரு தொழில் அமைப்பு அல்லது தனிநபரைக் குறிக்கும். ஒரு தொழில் அமைப்பு அல்லது தனிநபர் iOwnWSH கருவியைப் பயன்படுத்த அழைப்பு விடுத்திருக்கும் எந்தவோர் ஊழியர் மற்றும்/அல்லது நபரையும் குறிக்கும்.

(d) “தரப்பினர்கள்" என்பது வேலையிடப் பாதுகாப்பு சுகாதாரக் கழகத்தையும் பங்கேற்பாளரையும் கூட்டாகக் குறிப்பிடும். “தரப்பினர்" என்பது வேலையிடப் பாதுகாப்பு சுகாதாரக் கழகம் அல்லது பங்கேற்பாளரைக் குறிப்பிடும்.

(e) “நோக்கம்" என்பது ஓர் அமைப்பின் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார உரிமத்துவம் ஆகியவை பற்றிய ஒட்டுமொத்த நிலை குறித்த அறிக்கையை முதலாளிகள் பெறுவதாகும்.

(f) “WSHI" என்பது சிங்கப்பூர் குடியரசின் அரசாங்கத்தைப் பிரதிநிதிக்கும், மனிதவள அமைச்சின் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரக் கழகம் என்று பொருள்படும்.

2. வரையறை

2.1 வேலையிடப் பாதுகாப்பு சுகாதாரக் கழகம், iOwnWSH-ன் உரிமையாளரும், வழங்குநரும் ஆகும்.

2.2 iOwnWSH-ல் பங்கேற்பது, வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரச் சட்டம் (அத்தியாயம் 354A), அதன் துணைச் சட்டங்கள் ஆகியவற்றின்கீழ் வரும் கடமைகள், பொறுப்புகள், தேவைகள் ஆகியவற்றிலிருந்து பங்கேற்பாளருக்கு விலக்கு அளிக்காது.

2.3 iOwnWSH-ன் நோக்கம் கருதி பங்கேற்பாளர் அளித்துள்ள தகவல்கள் அனைத்தையும் சரிபார்க்கும் உரிமை வேலையிடப் பாதுகாப்பு சுகாதாரக் கழகத்திற்கு இருக்கும். இத்தகைய சரிபார்ப்புகளுக்கு பங்கேற்பாளர் இதன்மூலம் ஒப்புதல் அளிக்கிறார். அத்துடன், வேலையிடப் பாதுகாப்பு சுகாதாரக் கழகத்திற்குத் தேவைப்படுமெனில், பங்கேற்பாளர் இத்தகைய சரிபார்ப்புப் பணிகளின் பேரில் கழகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவும் இதன்மூலம் ஒப்புதல் அளிக்கிறார்.

2.4 iOwnWSH-க்கு பங்கேற்பாளர் அளித்த தகவல்களை வேலையிடப் பாதுகாப்பு சுகாதாரக் கழகமும் அதிகாரமளிக்கப்பெற்ற இதர ஆய்வாளர்களும் ஆராய்ச்சி, பகுப்பாய்வு ஆகியவற்றின் பேரில் பயன்படுத்தலாம். அவர்கள் ஆய்வின் முடிவுகளை, ஒட்டுமொத்தத் தரவுகளின் வடிவில், பங்கேற்பாளரை அடையாளப்படுத்தாத வகையில் வெளியிடலாம்.

3. வேலையிடப் பாதுகாப்பு சுகாதாரக் கழகத்தால் இரத்துசெய்யப்படுதல்

3.1 முன் அறிவிப்பின்றி, காரணம் ஏதும் கொடுக்காமல் iOwnWSH-க்கான பங்கேற்பாளரின் அனுமதியை உடனடியாகத் திரும்பப் பெறும் அதிகாரம் வேலையிடப் பாதுகாப்பு சுகாதாரக் கழகத்திற்கு உண்டு. iOwnWSH-ல் இருந்து பங்கேற்பாளரின் அனுமதியைத் திரும்பப் பெறுவது, நீக்குவது அல்லது தகுதிநீக்கம் செய்வது தொடர்பில் வேலையிடப் பாதுகாப்பு சுகாதாரக் கழகம் எடுக்கும் முடிவே இறுதியானது.

3.2 வேலையிடப் பாதுகாப்பு சுகாதாரக் கழகத்திற்கு iOwnWSH-ஐ எந்தவொரு நேரத்திலும், காரணம் ஏதும் கொடுக்காமல் நிறுத்தி வைப்பதற்கு அல்லது இரத்து செய்வதற்கான அதிகாரம் உள்ளது. அதன்பொருட்டு கழகம் இழப்பீடு எதனையும் ஏற்கவேண்டிய தேவையில்லை. இத்தகைய நிறுத்தம் அல்லது இரத்து தொடர்பில், வேலையிடப் பாதுகாப்பு சுகாதாரக் கழகத்தின்மீது பங்கேற்பாளர் எந்தவோர் இழப்பீட்டையும் கோர முடியாது.

4. மாற்றம்

4.1 வேலையிடப் பாதுகாப்பு சுகாதாரக் கழகம், எந்தவொரு நேரத்திலும், iOwnWSH-ன் விதிமுறைகள், உள்ளடக்கம், தகுதிவரம்புகள் ஆகியவற்றை மாற்றலாம் அல்லது திருத்தியமைக்கலாம். எந்தவொரு மாற்றமாக இருப்பினும், அது iWorkHealth இணையத்தளத்தில் அல்லது இதர ஊடகத் தளங்களில் வெளியிடப்படும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி முதல் நடப்புக்கு வரும். பங்கேற்பாளர் iOwnWSH-ஐத் தொடர்ந்து பயன்படுத்துவதன்மூலம் இந்த மாற்றங்களையும் திருத்தங்களையும் ஏற்றுக்கொண்டதாக எடுத்துக்கொள்ளப்படும்.

5. தள்ளுபடி

5.1 வேலையிடப் பாதுகாப்பு சுகாதாரக் கழகத்தால் ஏற்படும் எவ்விதத் தாமதமோ விடுபடலோ, அது செயல்படுத்தக்கூடிய அல்லது அதற்கு உரித்தான உரிமை, அதிகாரம் அல்லது முன்னுரிமையை  விட்டுக்கொடுப்பதாகாது.

5.2 இந்த விதிமுறைகள் எவற்றையேனும் பங்கேற்பாளர் மீறும் பட்சத்தில், அதன்பொருட்டு வேலையிடப் பாதுகாப்பு சுகாதாரக் கழகம் வழங்கும் விலக்கானது, அடுத்தடுத்து ஏற்படும் விதிமீறல்களுக்கும் உரித்தான விலக்காக ஏற்றுக்கொள்ளப்படாது.

6. பிரிக்கக்கூடிய தன்மை

6.1 இந்த விதிமுறைகளில் ஏதேனும் ஒன்று, அல்லது அவற்றுள் ஒரு பகுதியானது ஏதேனும் காரணத்திற்காக நடைமுறைப்படுத்த இயலாது அல்லது செல்லுபடியாகாது என்று இன்னொரு நீதித்துறையைச் சார்ந்த நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டால், மற்ற விதிமுறைகள் எவ்வகையிலும் பாதிக்கப்பட மாட்டா; பங்கேற்பாளர்களின் உரிமைகளும் பொறுப்புகளும், குறிப்பிட்ட அந்த விதிமுறை அல்லது அதன் ஒரு பகுதி இந்த ஆவணத்தில் இடம்பெறவில்லை என்பதான நிலையில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

7. நடப்புச் சட்டம்

7.1 இந்த விதிமுறைகளும் அடுத்தடுத்து வரவிருக்கும் மாற்றங்களும், எல்லா நோக்கங்களுக்கும், சிங்கப்பூர்க் குடியரசின் உள்நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டு, அவற்றின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும்.

8. சமரசம்

8.1 இந்த விதிமுறைகள் தவிர்த்து, இவற்றுடன் அல்லது இந்தத் துறையுடன் தொடர்புடைய சர்ச்சை, இழப்பீட்டுக் கோரிக்கை, கேள்வி, கருத்து வேறுபாடு ஆகியவை (ஒரு “சர்ச்சை") ஏற்படும் பட்சத்தில், சிங்கப்பூர்ச் சமரச நிலையம் வகுத்துள்ள முறையின்கீழ் இரு தரப்பினரும் போதுமான முயற்சி மேற்கொண்டு சர்ச்சைக்குத் தீர்வுகாண முயன்றிருந்தால் ஒழிய, எந்தவொரு தரப்பினரும் வேறு வகையிலான முறைகளில் சர்ச்சைகளுக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கக்கூடாது. இந்த வாசகம் 8.1-ன் கீழ், சிங்கப்பூர்ச் சமரச நிலையத்தில், குறைந்தது ஒரு சமரசக் கலந்துரையாடலுக்காவது சென்றிருந்தால், இரு தரப்பினரும் போதுமான முயற்சி மேற்கொண்டதாக எடுத்துக்கொள்ளப்படும்.

8.2 வாசகம் 8-ன் கீழ், ஒரு தரப்பினருக்கு இன்னொரு தரப்பினரிடமிருந்து சமரசத்திற்கான எழுத்துபூர்வ அறிக்கை வெளியிடப்படும் எனில், அவர் அதற்கு ஒப்புதல் தெரிவித்து, சமரசக் கலந்துரையாடலில் கலந்துகொள்ளவேண்டும்.

8.3 எழுத்துபூர்வ அறிக்கை கொடுக்கப்பட்ட தொண்ணூறு (90) நாள்களுக்குள் சமரசக் கலந்துரையாடல் தொடங்கவேண்டும். அவ்வாறு தொடங்கவில்லை எனில், இரு தரப்பினரில் எவர் வேண்டுமானாலும் சர்ச்சைக்குத் தீர்வுகாண்பதை நாடலாம்.

9. சர்ச்சைகளுக்கான தீர்வுகாணல்

9.1 வாசகம் 8-க்கு உட்பட்டு, அதன் தொடர்பிலான விதிமுறைகள் நடப்பில் இருக்கும் காலம் வரையில், எந்தவொரு சர்ச்சையும், சிங்கப்பூர் அனைத்துலக  நடுவர் மன்றநிலையத்தின் (“SIAC") நடுவர் மன்ற விதிமுறைகளுக்கு உட்பட்டு, நடுவர் மன்ற அதிகாரி ஒருவரால் ஆங்கில மொழியில் விசாரிக்கப்பட்டு இறுதியான சமரசத்தை எட்டுவதற்குப் பரிந்துரைக்கப்படவேண்டும்.

9.2 நடுவர் மன்றம்நடைபெறும் இடம், சிங்கப்பூர்க் குடியரசாக இருக்கவேண்டும்.

9.3 நடுவர் மன்ற அதிகாரியானவர், இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவராக இருக்கவேண்டும். அதன் தொடர்பில், ஒரு தரப்பினர் எழுத்துபூர்வப் பரிந்துரையை வெளியிட்ட முப்பது (30) நாள்களுக்குள் மற்றொரு தரப்பினர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை எனில், நடுவர் மன்ற அதிகாரியானவர், SIAC விதிமுறைகளுக்கு உட்பட்ட வகையில் சிங்கப்பூர் அனைத்துலகப் நடுவர் மன்ற நிலையத்தால் நியமிக்கப்படுவார்.

9.4 நடுவர் மன்ற முடிவு எதுவாயினும், அது சிங்கப்பூர்க் குடியரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட வகையில் நடைமுறைபடுத்தப்படும்.

10. தரவுப் பாதுகாப்பு

10.1 ஏற்புடையதாக இருப்பின், iOwnWSH-ன் தனியுரிமை சார்ந்த அறிக்கையானது, இந்த விதிமுறைகளின்கீழ் சேகரிக்கப்படும் தனிநபர் தரவு அனைத்திற்கும் பொருந்தும். iWorkHealth, iOwnWSH ஆகியவற்றின் தனியுரிமை அறிக்கைகள், iWorkHealth இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

10.2 iOwnWSH-ம் அதன் தரவுகள் அனைத்தும், iOwnWSH ஆய்வில் பங்கேற்பாளர் அளிக்கும் தகவல்கள் உட்பட, சிங்கப்பூரில் உள்ள மூன்றாம் தரப்புச் சேமிப்புச் சேவை தளங்களில் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன.

10.3 வேலையிடப் பாதுகாப்பு சுகாதாரக் கழகம், iOwnWSH கருவியின் உரிமத்துவத்தை மூன்றாம் தரப்பினர் ஒருவருக்குக் கைமாற்றிவிடும் பட்சத்தில், iOwnWSH ஆய்வில் பங்கேற்பாளர்கள் அளித்த தகவல்கள் புதிய உரிமையாளருக்குக் கைமாற்றிவிடப்படும்.

11. மதிநுட்பச் சொத்து

11.1 iOwnWSH வெளியிடும் முடிவுகள், அறிக்கை, தரவுகள், தகவல்கள் ஆகியவை சார்ந்த மதிநுட்பச் சொத்துக்கான உரிமை, வேலையிடப் பாதுகாப்பு சுகாதாரக் கழகத்திற்கே உரித்தானது. வாசகம் 11-ன்  கீழ் உள்ள எந்தவோர் அம்சமும், இந்த விதிமுறைகளினால் வேலையிடப் பாதுகாப்பு சுகாதாரக் கழகம் வெளியிட்டுள்ள எந்தவொரு முடிவு, அறிக்கை, தரவு, தகவல் ஆகியவை தொடர்பிலான உரிமை, உரிமைப்பத்திரம், அக்கறை அல்லது  மதிநுட்ப உரிமையை பங்கேற்பாளர்களுக்கு அளித்திடாது.

11.2 வாசகம்11, இந்த விதிமுறைகள் இரத்து செய்யப்பட்ட அல்லது காலாவதியான பின்னரும் நடப்பில் இருக்கும்.

12. பொறுப்புத் துறப்பும் இழப்பீடும்

12.1 பின்வருவனவற்றுடன் தொடர்புடைய அல்லது அவற்றால் பங்கேற்பாளருக்கு ஏற்படும் எவ்வித பாதிப்புக்கும் வேலையிடப் பாதுகாப்பு சுகாதாரக் கழகம் பொறுப்பேற்காது:

(a) iOwnWSH-க்கான இணைப்பைப் பெற்று, பயன்படுத்துதல்;

(b) செயல்பாட்டில் அல்லது அனுப்புகையில் ஏற்படும் தாமதம், தொடர்புத் துண்டிப்பு, இணையத்தொடர்பில் ஏற்படும் சிரமம், அல்லது சாதனம், மென்பொருள் ஆகியவற்றில் ஏற்படும் கோளாறு;

(c) பங்கேற்பாளர், அதன் இயக்குநர்கள், அதிகாரிகள், ஊழியர்கள், பணியாளர்கள், முகவர்கள் ஆகியோர் அதிகாரமற்ற வகையில் ஆய்வுக்கான இணைப்பைப் பெறுதல், அதனைப் பயன்படுத்துதல், அதனை மாற்றியமைத்தல், அதனைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளுதல் அல்லது தவறாகப் பயன்படுத்துதல்;

(d) ஆய்வின் இணைப்புகள் உள்ளடங்கிய அழைப்பு உள்ளிட்ட, iOwnWSH இடம்பெற்றுள்ள இணையத்தளத்தின் உண்மைத்தன்மையைப் பங்கேற்பாளர் சரிபார்க்கத் தவறுதல்;

(e) iOwnWSH-ல் இருந்து பெறக்கூடிய தகவல்களின் பொருட்டு, பங்கேற்பாளர் மேற்கொள்ளும் அல்லது தவிர்க்கும் செயல்.

12.2 iOwnWSH-ன் மூலம் வெளிவரும் அறிக்கைகள் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. சட்ட வழக்குகள் அல்லது தொழில் நிபுணத்துவ ஆலோசனைக்கு மாற்றாக அவை பயன்படுத்தப்படக் கூடாது.

12.3 iOwnWSH உருவாக்கும்அறிக்கைகளைக் கொண்டு பங்கேற்பாளர், வேலையிடப் பாதுகாப்பு சுகாதாரக் கழகத்திடம் எந்தவொரு புகார், இழப்பீட்டுக் கோரிக்கை அல்லது சர்ச்சையை முன்வைக்கக் கூடாது. இத்தகைய புகார்கள், இழப்பீட்டுக் கோரிக்கைகள், சர்ச்சைகள் ஆகியவை தொடர்பில் சமரசம் செய்ய, விசாரிக்க அல்லது ஏதேனும் நடவடிக்கை எடுக்கவேண்டிய பொறுப்பு வேலையிடப் பாதுகாப்பு சுகாதாரக் கழகத்திற்குக் கிடையாது.

12.4 பங்கேற்பாளர், அதன் இயக்குநர்கள், அதிகாரிகள், ஊழியர்கள், பணியாளர்கள், அல்லது முகவர்கள் (“பங்கேற்கும் தரப்பினர்") இந்த விதிமுறைகளின் தொடர்பில் அல்லது பங்கேற்பாளர் iOwnWSH-ஐப் பயன்படுத்தியதன் தொடர்பில், எந்த அல்லது எல்லா நட்டங்கள், பாதிப்புகள், செலவுகள் (முழுமையான இழப்பீட்டுக்கு உரித்தான சட்டச் செலவுகள் உட்பட) ஆகியவற்றால் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரக் கழகத்திற்கு,  ஏற்பட்ட பாதிப்பு, செலுத்திய தொகை ஆகியவற்றுக்கு வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரக் கழகத்துக்கு இழப்பீடு செய்யவேண்டும்.  

13. மூன்றாம் தரப்பினரின் உரிமைகள்

13.1 இந்த ஒப்பந்தத்தில் எந்தவொரு தரப்பையும் சாராத நபர் ஒருவருக்கு ஒப்பந்தங்கள் (மூன்றாம் தரப்பினரின் உரிமைகள்) சட்டத்தின்கீழ், எந்தவொரு விதிமுறையையும் அமல்படுத்துவதற்கான உரிமை கிடையாது.

14. முழுமையான, ஒட்டுமொத்த ஒப்பந்தம்

14.1 இந்த விதிமுறைகள் i) பங்கேற்பாளர் மற்றும் (ii) WSHI-க்கு இடையிலான   ஒப்பந்தம் தொடர்பான அனைத்து  விதிமுறைகளையும் உள்ளடக்கும்.